மணிபல்லவம் (சரித்திர நாவல்) By Na.Parthasarathy
பக்கங்கள் - 984
5 பாகங்கள் உள்ளன.
முன்னுரை
இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக்கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கை யில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள் ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஒரளவு நன்றாகவே நிறைவேறி யிருக்கிறது. - நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை. போர்க்களங்களில் வில்லும், வேலும், வாளும், கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங் களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.
இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஒர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென் கிறான். இறுதிவர்ை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும்கூடதான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல் கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்த வர்கள். இந்தக் கதையின் எல்லாக் கதாபாத்திரங் களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் - முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர், நகைவேழம்பர்- இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஒவியன் மணிமார்பன்நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம்- என்று எண்ணும் அருட்செல்வர்- எல்லாரும் இதில் உயிர்க் களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள். ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணிர் பெருக்கி - "இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை” என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய் சிலிர்க்கச் செய்வது. இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக்கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்த வரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. "பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லா வற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒருவிதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும்.
மணிபல்லவம் (சரித்திர நாவல்): By Na.Parthasarathy (English Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site